Tuesday, September 10, 2013

நண்பர்கள் வேடத்தில் எதிரிகள்!


நண்பர்கள் வேடத்தில் எதிரிகள்! 
நண்பர்களே!

இயற்கை வேளாண்மை மீண்டும் திரும்ப விடக்கூடாது என்று நினைக்கும் ஒரு கூட்டம் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தால் பயன் இருக்காது என்பதால் அதை ஆதரிப்பது என்ற போர்வையில் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

அது அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சிகளில் வைக்கப்பட்ட ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்பட்டது என்ற விளம்பரத்துடன் விற்கப்பட்ட கலன்களில் இருந்து நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் இந்திரஜால வித்தைகளாகச் செயல்படும் என்று ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது வரை பல வேடங்களில் நடந்துகொண்டு உள்ளது!...

அதன் எதிரொலி சமூக வலை தளங்களிலும் பிரதி பலிக்கிறது.

அவற்றில் கசப்பான உண்மைகளைவிட இனிப்பான பொய்கள் விரைவில் பரவுகிறது!

அதன் காரணமாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை நம்பி இயற்கை அல்லாத போலிகளைப் பயன்படுத்துவார்கள்.....

ஆதாவது பாட்டில்களிலும் டின்களிலும் வேதிப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தியதற்குப் பதிலாக அதே பாட்டில்களில் அடைக்கப்பட்ட இயற்கைத் தயாரிப்பு என்று பெயர் சூட்டப்பட்ட பயனற்ற ஆலைத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்வார்கள்....

அதே போல நாட்டில் இயந்திரப் பயன்பாட்டின் காரணமாக நாட்டுமாடுகளின் பயன்பாடு குறைந்துபோய் கலப்பின மாடுகளின் எண்ணிக்கை பெருமளவு உள்ள நிலையில் அவை பயன்படாது , அவற்றின் சாணமோ மூத்திரமோ இயற்கை வேளாண்மைக்கு ஒத்து வராது என்று சொல்வதன்மூலம் இருக்கும் இயற்கை எரு வாய்ப்புக்களையும் வீணடிக்கச் சொல்கிறார்கள்.

நாட்டில் உள்ள கோடானு கோடிக் கணக்கான விவசாய நிலங்கள் கலப்பின மாடுகளின் கழிவுகளையும் கோழிப்பண்ணைக் கழிவுகளையும் பயன்படுத்திவரும் நிலையில் அவற்றைப் புறக்கணித்துவிட்டு அவ்வளவு நாட்டுமாட்டுச் சாணத்துக்கும் மூத்திரத்துக்கும் எங்கே போவது?

அந்தப் பகட்டான பிரச்சாரத்தை நம்பிச் செயலில் இறங்குபவர்கள் நடைமுறை அனுபவம் இல்லாத படித்த ஆனால் வேளாண்மையில் ஈடுபாடுகொண்ட புதிய தலைமுறையாகத்தான் அதிகம் இருக்கும்.

ஆனால் நடைமுறை உண்மைகள் வேறாக கசப்பாக இருப்பதைப் பார்க்கும் அவர்கள் இயற்கை வேளாண்மை ஒத்து வராது என்ற முடிவுக்கு வந்து கேடுகெட்ட வேதிப் பொருட்களைச் சார்ந்த விவசாயம் என்னும் படுகுழியில் மீண்டும் விழும் அபாயம் அதிகம் இருக்கிறது!

அதனால் இயற்கை வேளாண்மை பற்றி சொல்லப்படும் அல்லது விளம்பரப்படுத்தப்படும் எதையும் தீர ஆராய்ந்து எழும் பல ஐயங்களைப் போக்கிக்கொண்ட பின்பே ஏற்றுக்கொள்வது சாலச் சிறந்தது!

இல்லாவிட்டால் இயற்கை வேளாண்மைக்கு எதிரான சக்திகள் தொடர்ந்து வெற்றிபெற வாய்ப்புக்களை நாமே உருவாக்கிக் கொடுத்தவர்கள் ஆவோம்.

No comments:

Post a Comment