Wednesday, September 4, 2013

மனுசங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு என்பதை நானறிவேன்


மனுசங்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கு என்பதை நானறிவேன்.

மைனாவாகிய நான் இந்த ரோட்டுக்கு பக்கத்திலே இருந்த மரத்தில் நெடுநாட்களாக எங்களின் குடும்பத்தோடு சந்தோஷமாக பாடித்திரிந்தேன்.

ரோட்டை அகலப்படுத்தி விபத்து இல்லாமல் மோட்டார் வாகனங்களில் மனிதர்கள் செல்வதற்காக, நான் வாழ்ந்த மரத்தை அடியோடு வெட்டி விட்டார்கள்.

விவசாயம் மனிதர்கள் இவ்விடத்தில் செய்யவில்லை. ஆனால் ஒரு மகாராசன் நிறைய மது அருந்தி, நிறைய சோத்தை தின்னுட்டு நடுரோட்டில் வாந்தியெடுத்திருந்தார்.

வயல்வெளிகளில் நீங்கள் விவசாயம் செய்திருந்தால் நான் உங்க வயல்களில் விவசாயத்திற்கு கேடு செய்யும் பூச்சிகளை வேட்டையாடி தின்று பசியாறிருப்பேன்.

அவர் எடுத்தது வாந்தியாக இருந்தாலும், எனக்கு கொடுக்கப்பட்ட கடமை அந்த வாந்தியை கொத்தி உண்டு சுத்தப்படுத்துவதே.

அந்நேரத்தில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு மோட்டார் வாகனம் என் மீது ஏறி நசுக்கியது. உயிர் பிரிந்தது. என் குடும்பங்கள் என்னாகிற்று என எனக்கு தெரியவில்லை.

என் பூத உடல், கடந்த மூன்று நாட்களாக இதே இடத்தில் கிடக்கிறது. என்னை நீங்கள் தொடாதீர்கள் பறவை காய்ச்சல் நோய் வந்துவிடும். இன்னும் உங்களிடம் பேச ஆசைதான் ஆனால் கேட்கும் மனநிலையில் நீங்கள் இல்லை என்பதையும் நானறிவேன்.

No comments:

Post a Comment