Saturday, August 31, 2013

சிலம்பத்தில் “வளரி’ என்ற எறி

சிலம்பத்தில் “வளரி’ என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.

சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், “”சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.

தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.

ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்” எனக் கூறியுள்ளார். பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் “மருதுபாண்டிய மன்னர்கள்’ என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.

No comments:

Post a Comment